தொலைக்காட்சி பெட்டி வெடித்து தீப்பற்றியதில் மூதாட்டி கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியில் குப்புசாமி(85) என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள ரொட்டி தயாரிக்கும் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து குப்புசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 10 வருடங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு சரஸ்வதி(75) என்ற மனைவி இருந்தார். இவர் சத்தியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு சரஸ்வதி வீட்டிற்கு வந்தார். அதன்பின் சரஸ்வதி தானும் சாப்பிட்டுவிட்டு தன்னுடைய கணவருக்கும் வைத்துக் கொடுத்தார். இதனைதொடர்ந்து வீட்டின் வெளியே உள்ள நாற்காலியில் குப்புசாமி தூங்கினார். இதில் குப்புசாமி தினசரி நாற்காலியில் தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இதேபோன்று சரஸ்வதி வீட்டை சாதாரணமாக பூட்டிவிட்டு உள்ளே தொலைக்காட்சியை பார்த்தபடி கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தார். அப்போது இரவு 11.30 மணியளவில் திடீரென தொலைக்காட்சி பெட்டி தீப்பிடித்து வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த தீ கட்டிலில் படுத்திருந்த சரஸ்வதியின் சேலையில் பற்றி எரிந்தது.
இதற்கிடையில் கரும்புகை வீட்டை சூழ்ந்ததால் சரஸ்வதி வெளியே செல்ல முடியாமல் உடல் கருகி அவர் அங்கேயே விழுந்து விட்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்று சரஸ்வதியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் சரஸ்வதி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரஸ்வதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.