குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முளகுமூடு பேருந்து நிறுத்தத்தில் நேற்று முன்தினம் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் இருந்தவரை 2 பேர் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்ட தொடங்கினர். அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோதும் கூட அவரை விடாமல் வெட்டினார்கள். இதை கண்டு ஏராளமானோர் திரண்டதால் அரிவாளுடன் நின்ற இருவரும் தப்பிச் சென்றனர்.
இதையடுத்து வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய நபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் காவல்துறையினர் காயமடைந்தவரிடம் விசாரணை நடத்துவதற்காக மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் அவர் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
எனவே காவல்துறையினருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் முளகுமூடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கள்ளக்காதல் விவகாரத்தால் அரிவாள் வெட்டு நடந்தது தெரியவந்தது. குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பூசாரிக்கு 34 வயதுடைய மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அவருடன் 8 மாதங்களுக்கு முன்னர் அந்த பெண் வீட்டிலிருந்து கள்ளக்காதலுடன் சென்றுவிட்டார். இதுபற்றிய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வந்த நிலையில் தன் மனைவியின் கள்ளக்காதலன் முளகுமூடு பகுதிக்கு வருவதை அறிந்த பூசாரி, தனது நண்பருடன் சென்று அவரை வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த தகவல் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கொலை செய்ய முயற்சி செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.