கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
17 வயதுடைய மாணவி சென்ற ஆண்டு தனியார் பள்ளியில் +1 படித்துள்ளார். அப்போது கொரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளி பள்ளி மூடப்பட்டதை அடுத்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. அந்த வகுப்பில் மாணவியிடம் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி ஆபாசமாக பேசியுள்ளார். மாணவி பயத்தின் காரணமாக யாரிடமும் கூறவில்லை. நேரடி வகுப்பு தொடங்கிய பின்னரும் ஆசிரியரின் பாலியல் தொல்லை அதிகமாகியுள்ளது.
தொடர்ந்து சிறப்பு வகுப்பு உள்ளதாக பள்ளிக்கு வரவழைத்து ஆசிரியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதேபோல் மாணவி 12-ஆம் வகுப்புக்கு செல்லும்போதும் பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது. இதுபற்றி தன்னுடைய ஆண் நண்பரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாணவி தன் பெற்றோரிடம் தனக்கு இந்த பள்ளி பிடிக்கவில்லை என்று கூறி அந்தப் பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் வாங்கியுள்ளார்.
பின்னர் அந்த மாணவி அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்துள்ளார். மேலும் ஆசிரியர் மீது சக்கரவர்த்தியின் பாலியல் தொந்தரவு தொடர்ந்துள்ளது. இதனால் மனமுடைந்த 17 வயது கொண்ட பள்ளி மாணவி வீட்டில் தன்னுடைய அறையில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.