வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத் தரக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் திருமணக்கோலத்தில் பா.ம.க. நிர்வாகி கலந்து கொண்டார்.
மதுரை ஐகோர்ட்டானது வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தரக்கோரி தஞ்சாவூர் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் திருவையாறில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வன்னியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வம் தலைமை தாங்கினார். இவ்வாறு நடைபெற்ற போராட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணியின் துணைத்தலைவரான விஜயராகவன், முன்னாள் மாவட்ட செயலாளரான ஆறுமுகம், முன்னாள் மாவட்ட தலைவரான முன்னரசு போன்றோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ம.க.ஸ்டாலின் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். மேலும் போராட்டத்தில் நிர்வாகிகள் ராம்குமார், மதிவிமல், ரமேஷ், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் பா.ம.க. திருவையாறு தெற்கு ஒன்றிய செயலாளர் கர்ணனுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் அவர் திருமணக்கோலத்தில் தன் மனைவி வசந்தியுடன் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார். இதற்கு முன்பாக பா.ம.க. நிர்வாகிகள் திருவையாறு பாலக்கரையில் இருந்து போராட்டம் நடந்த பேருந்து நிலையத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.