ஊருக்குள் புகுந்த யானை ஒன்று நெல், ராகி, பச்சை மிளகாய் மற்றும் சில பயிர்களை மிதித்து நாசம் செய்தது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியான ராயக்கோட்டை, மாரண்டஅள்ளி வனப்பகுதிகளில் யானைகள் முகாமிட்டு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் இரு குட்டிகளுடன் யானை ஒன்று சுற்றி திரிந்தது. இதனையடுத்து வனச்சரகர் செல்வம் தலைமையிலான வனத்துறையினர் யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டுவதற்கு தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் மாரண்டஅள்ளி, அமானி மல்லாபுரம், நல்லூர், கரகூர், பெல்ரம்பட்டி, சீங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு யானை ஊருக்குள் புகுந்து சுற்றித் திரிந்தது.
இவ்வாறு ஊருக்குள் நுழைந்த அந்த யானை நெல், ராகி, தக்காளி, பச்சை மிளகாய் உள்ளிட்ட பயிர்களை மிதித்து நாசம் செய்தது. இதுகுறித்து வனச்சரகர் செல்வத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி வனச்சரகர், வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களின் உதவியுடன் மேளம் அடித்தும், பட்டாசு வெடித்தும் அந்த காட்டு யானையை அங்கிருந்து காட்டுக்குள் விரட்டி அடித்தனர். இதற்கிடையில் பாலக்கோடு பகுதியில் ஊருக்குள் திடீரென்று நுழைந்த காட்டு யானையால் கிராம மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.