வீட்டில் இருந்தே பணிபுரியும் ஊழியர்களுக்கு என புதிய சட்டங்களை போர்ச்சுகல் அரசு கொண்டு வரவுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என அலுவலகங்கள் தெரிவித்தன. இதனால் வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணிபுரிந்தனர். இருப்பினும் அவர்கள் வேலை நேரத்தைத் தாண்டியும் பணிபுரிவதாக கூறப்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்கு மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டன. அதிலும் 8 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்ற சட்டத்திற்கு புறம்பாக பல மணி நேரம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த சட்டமானது எழுத்துபூர்வமாக மட்டுமே உள்ளது. நடைமுறையில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
அதிலும் வேலை முடிந்த பிறகும் அலுவலகங்களிலிருந்து ஊழியர்களுக்கு தொடர்ந்து அழைப்புகள் வருவது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. மேலும் ஊழியர்களால் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரத்தை ஒதுக்க முடியவில்லை. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போர்ச்சுகல் அரசு சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இச்சட்டமானது ஊழியர்களின் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சமநிலையை ஏற்படுத்த வழிவகை செய்யும்.
மேலும் அலுவலகங்களில் அதிக பணிச்சுமை காரணமாக தங்களது சொந்த வாழ்க்கை மற்றும் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்று பலரும் குற்றம் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் படி வேலை நேரம் முடிந்த பிறகும் ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கும் அலுவலகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதனை தொடர்ந்து வீடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேவையான மின்சாரம், இணையம், எரிபொருள் ஆகியவற்றிற்கு ஆகும் செலவுகளை அந்தந்த அலுவலகங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிலும் அந்நாட்டில் தற்பொழுது ஆட்சியில் இருக்கும் சோசலிஸ்ட் கட்சியினர் வீட்டில் இருந்து பணிபுரிபவர்களுக்கு பல்வேறு உதவிகரமான சட்டங்களை கொண்டு வந்துள்ளனர். ஆனாலும் இவை அனைத்தும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதில்லை. ஏற்கனவே இது போன்று ஒரு சட்டத்தை அரசு முன்வைத்தது. ஆனால் அதற்கு நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு அளிக்கவில்லை. அதாவது, வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது சாதனங்களை OFF செய்து வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.