அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த அதிமுக பிரமுகர் மற்றும் அவரது சகோதரி ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஓடப்பள்ளி கிராமத்தில் கல்யாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் நூலகராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கல்யாணி தனது சகோதரரான ஓடப்பள்ளி அதிமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார் உடன் இணைந்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் கேட்டுள்ளனர். இதனை நம்பிய அப்பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் மற்றும் மதிவதனி ஆகிய 2 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலா 12 லட்சம் வீதம் 24 லட்சம் ரூபாயை கல்யாணியிடம் கொடுத்துள்ளனர்.
இதனை வாங்கிக்கொண்ட கல்யாணி மற்றும் செந்தில்குமார் அவர்கள் இரண்டு பேருக்கும் போலி பணி நியமன ஆணையை வழங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீஸ்வரன் மற்றும் மதிவதனி ஆகிய இரண்டு பேரும் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கல்யாணி மற்றும் அவரது சகோதரன் செந்தில்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செந்தில்குமாரை நாமக்கல் கிளை சிறையிலும், கல்யாணியை சேலம் சிறையிலும் அடைத்துள்ளனர்.