Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தங்க சங்கிலியை தா” மர்ம நபரின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் நகை பறித்துவிட்டு தப்பி சென்ற மர்ம நபர் தடுக்க முயன்ற வாலிபர் மீது திராவகம் வீசினார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி சேவாக்கவுண்டனூர் பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் பெருந்துறையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரிந்து வருகிறார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதுள்ள ஒரு பெண் வேலை தேடி பெருந்துறைக்கு வந்துள்ளார். அந்தப் பெண்ணை ரகுபதி கள்ளிப்பட்டியிலுள்ள நண்பரின் வீட்டில் தங்க வைப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளிப்பட்டி ஆற்று பாலம் அருகே இருவரும் சென்றபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த பெண்ணிடம் மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை கொடுக்குமாறு கூறினார்.

இதனை ரகுபதி தடுக்க முயற்சி செய்தபோது ஆத்திரமடைந்த மர்ம நபர் தன் பாட்டிலில் வைத்திருந்த திராவகத்தை அவர் முகத்தில் ஊற்றினார். இதனைத்தொடர்ந்து அந்த மர்ம நபர் பெண்ணிடம் நகையை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகுபதியை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் ரகுபதி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |