சென்னை வெள்ளத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை போட்டோ ஷூட் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடம்பாக்கத்து, தியாகராய நகர், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சி விரைவாக செய்து வருகின்றது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 3 நாட்களாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வட சென்னை மற்றும் தென் சென்னை ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ததோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருளையும் வழங்கினார். இதனிடையே சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அண்ணாமலை மற்றும் கரு. நாகராஜன் ஆகியோர் படகு ஒன்றின் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றபோது சினிமாவில் வருவதுபோல் போட்டோ ஷூட் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.