தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளில் நீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னை எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி தருகின்றது. போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது, சாலைகளில் மரங்கள் ஆங்காங்கே சாய்ந்து விழுந்துள்ளன.
‘கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்’? என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சென்னை மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 2015க்கு பிறகு இதுபோன்ற சூழ்நிலையை சென்னை மீண்டும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது என்றும், ஒரு வாரத்திற்குள் நிலைமை சரியாகும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அப்படி நிலைமை சீராகவில்லை என்றால் தன்னிச்சையாக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடரும் என்று சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பான பொதுநல வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.