கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் கீழகடம்பூரில் காமராஜர் வீதியில் சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலவிநாயகம்(21) என்ற மகன் உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதியன்று தனது காதலியைப் பார்ப்பதற்காக திருச்சிக்கு வந்தார். அன்று இரவு 8.30 மணிக்கு தனது காதலியுடன் திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் அருகே உள்ள டைகர் பூங்காவில் வைத்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அங்கு வந்த 5 நபர் கொண்ட கும்பல் பாலவிநாயகர முகத்தில் கத்தியால் தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.எம்.சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அந்த விசாரணையில் பாலவிநாயகத்தை தாக்கியது, ஜாகீர்உசேன்(26), சிவசங்கர்(19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 15,16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் என்று தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்து ஜாகீர்உசேன் மற்றும் சிவக்குமார் ஆகிய 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மற்ற மூன்று சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.