திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகிலுள்ள பெராகம்பி ரெட்டியார் தெருவில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மற்றும் இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். அன்பழகனின் மனைவி லதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவரின் மனைவி லதா கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் அன்பழகன் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் லதாவிற்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு சென்னையில் இருந்து வந்த லதா வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 130 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்களும் அந்த மர்ம நபரின் கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.