தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதனால் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன.இந்நிலையில் சென்னையில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து பிரதமர் கேட்டார். இதையடுத்து கொரோனா நிவாரண பணிகள் மற்றும் இதுவரை ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு மாநில பேரிடர் நிதி செலவழிந்து விட்டதாகவும்,கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இதையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.