ஜீப்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள இருட்டிபாளையத்தில் சதீஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் குத்தியாலத்தூர் ஊராட்சியில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பரான கணபதிபாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி கூலித் தொழிலாளியாக இருந்தார். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருட்டிபாளையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஜீவா நகர் அருகில் ஒரு வளைவில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு ஜீப்பும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் ஜீப் மோதியதோடு நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டது. இதனால் மோட்டார்சைக்கிளில் சென்ற சதீஷ், பழனிச்சாமி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அதுமட்டுமின்றி மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த காடுபசுவன்மாளத்தை சேர்ந்த ரங்கன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்கள் 4 பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சதீஷ், பழனிச்சாமி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதற்கிடையில் ரங்கன், கார்த்திகேயன் இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நிற்காமல் சென்ற ஜீப் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த சதீசுக்கு நவீனா என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதேபோன்று பழனிச்சாமிக்கு அம்மாசை என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர்.