திருமண ஆசை காட்டி 17 வயது கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் புதுகிராமம் காலனியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். மாணவியின் உறவினரான சடையன்குளத்தை சேர்ந்த அசோக் என்பவர் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர்.
உறவினர் தானே என்று நெருக்கமாக பழகிய மாணவிக்கு திருமண ஆசைக்காட்டி கடந்த பிப்ரவரி மாதம் முதல் மாணவியை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. தனது ஆசையை மாணவியிடம் நிறைவேற்றிக்கொண்ட அந்த இளைஞர், பின்னர் மாணவியை பார்க்க வருவதே இல்லை. இதில் மாணவி கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது.
![]()
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி மாணவி திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனைகண்ட அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவியை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவிக்கு ஆண்குழந்தை பிறந்தது.இது குறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல்துறையினர் இளைஞர் அசோக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.