கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் குன்றி மலைப்பகுதியில் இருந்து கோவை நோக்கி ஒரு கார் சென்றது. இதேபோன்று கடம்பூரில் இருந்து இருடிப்பாளையம் நோக்கி பழனிச்சாமி, சதீஷ் ஆகிய 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காரும் மோட்டார் சைக்கிளும் கடம்பூர் மலைப்பகுதி 12-வது வளைவில் வந்தபோது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் மோட்டார் சைக்கிளில் வந்த பழனிச்சாமி, சதீஸ் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கோவையில் சிகிச்சை பெற்று வந்த பழனிச்சாமி, சதீஷ் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.