தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதனால் விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் பாய்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வங்கக்கடலில் நவம்பர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைய தொடங்கியுள்ளதால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். வருவாய் துறை, காவல்துறை,சுகாதாரத் துறை உள்ளிட்ட முக்கியத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதில் மீட்பு பணிகள்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.