நைஜீரியாவில் அடுக்குமாடி கட்டிடம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலியாகி உள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் உள்ள இயோகி மாவட்டத்தில் 21 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்டிட பணியில் வேலை பார்த்து கொண்டிருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய பணியாளர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை இடிபாடுகளுக்குள் சிக்கிய 9 பேரை மீட்பு குழுவினர் உயிருடன் பத்திரமாக மீட்டுள்ளனர். ஆனாலும், கட்டிட விபத்தில் சிக்கி இதுவரை 36 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த போது, எத்தனை பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர் என்ற தகவல் தெரியவில்லை. எனவே, கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது.