பொதுப்பணித்துறையின் தொழில்நுட்ப கல்வி பிரிவின் வேலூர் கோட்ட செயற்பொறியாளர் சோபனா கடந்த புதன்கிழமை அன்று லஞ்சம் ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அதிரடி வேட்டையில் சிக்கினார்.
அவரது கார் வேலூரில் உள்ள தங்குமிடம் ஓசூரில் உள்ள வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 2.26 கோடி ரூபாய் ரொக்கம் 37 சவரன் தங்க நகைகள் ஒன்றேகால் கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதவிர 11 வங்கிக் கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவிகள் மற்றும் சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
பெண் அதிகாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் பாதுகாப்பு கருதி வேலூர் கருவூலகத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறைக்கு பின்னர் வேலூர் நீதிமன்றத்தில் பணத்தை ஒப்படைக்க இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்து உள்ளனர். சோபனாவின் இலஞ்ச நடவடிக்கைகள் நேரில் மட்டுமின்றி வங்கி பரிவர்த்தனை மூலமும் நடந்திருப்பதால் லாக்கர் வசதியுடன் கூடிய அவரது ஓசூர் வங்கி கணக்கு உடனடியாக முடக்கப்பட்டது. எஞ்சிய வங்கி கணக்குகளும் முடக்கப்பட்ட இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
சோபனாவின் வீட்டில் இருந்து 14 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை அனைத்தும் சென்னை முதல் ஓசூர் வழங்கப்பட்ட வீடுகள் மற்றும் நிலங்கள் தொடர்புடையவை என்பதும் தெரியவந்துள்ளது. வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஷோபனாவே முக்கிய அதிகாரிகள் என்பதால் ஒப்பந்த பணிகளுக்கு பில்களை அனுமதிக்க ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கணிசமான அளவுக்கு லஞ்சம் பெற்றுள்ளார். அவற்றை சக அதிகாரிகளுக்கு ஒரு சதவிகிதம் 1 சதவிகிதம் ஒன்றரை சதவிகிதம் என்ற ஃபார்முலா அடிப்படையில் பிரித்துக் கொடுத்து இருப்பதும் தெரியவந்து உள்ளது.
லஞ்சப் பணம் யார் யாரிடமிருந்து பெறப்பட்டது ? யாருக்கெல்லாம் பிரித்துக் கொடுக்கப்பட்டது என்ற பட்டியலையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். பெண் அதிகாரி சோபனாவின் கார் மற்றும் தற்காலிக தங்கும் இடங்களில் இருந்து அது தொடர்பான துண்டு சீட்டுகள் வங்கி ரசீதுகள் சிக்கி உள்ளன. அவற்றை வைத்து தொடர்புடைய மற்ற அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களும் விசாரிக்கப்பட இருப்பதால் அவர்கள் கலக்கமடைந்துள்ளனர். 8 மாவட்டங்களில் வசூல் ராணியாக வலம் வந்த சோபனாவின் லட்ச நடவடிக்கையில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.