சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
ஏற்காட்டில் உள்ள குப்பனூர் சாலையில் நேற்று பெய்த கனமழையால் 5 கிலோமீட்டர் தொலைவில் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதாரம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
முன்னதாக ஏற்காடு சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் 3 நாட்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீண்டும் செயல்பட்டது. அதனால் பெரும்பாலான வாகனங்கள் குப்பனூர் சாலை வழியாக சென்றது. மேலும் இப்போது வரை ஒழுங்கமைப்பு பணி நடந்து வருகின்ற நிலையில் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் சேலம் ஏற்காடு சாலையில் அனுமதிக்கப்படவில்லை.
அதனால் அத்தியாவசிய பொருட்கள் குப்பனூர் சாலையிலேயே வந்து செல்கின்றன. இந்த நிலையில் நேற்று பெய்த மழையால் குப்பனூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள் ஏற்காட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விலை ஏற்றம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருக்கிறார்கள். சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.