நில அளவீடு செய்ய லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ள சூரியம்பாளையம் பகுதியில் சூவிழிராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு எலச்சிபாளையத்தில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் இந்த நிலத்தை அளவீடு செய்வதற்கு எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் மனு ஒன்று அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து சூவிழிராஜா மீண்டும் வருவாய் ஆய்வாளரிடம் சென்று கேட்டுள்ளார்.
இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரன் சூவிழிராஜாவிடம் லஞ்சமாக 5,000 பணம் கொடுத்தால் நிலத்தை அளவீடு செய்ய முடியும் என கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சூவிழிராஜா உடனடியாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் சென்று புகார் அளித்துள்ளார். இதனைதொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயன பவுடன் தடவிய 5009 ரூபாய் பணத்தை சூவிழிராஜாவிடம் கொடுத்து பரமேஸ்வரனிடம் வழங்குமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து சூவிழிராஜாவும் காவல்துறையினர் கூறியதுபோல வருவாய் ஆய்வாளரை நேரில் சந்தித்து அவர் லஞ்சமாக கேட்ட 5000 ரூபாயை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் கையும் களவுமான பரமேஸ்வரனை கைது செய்துள்ளனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ராசிபுரம் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.