மத்திய அரசு கொண்டு வரும் நலத் திட்டங்களால் அதிகம் பயன் பெறுவது தமிழ்நாடு தான் என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகரில் நடந்த மக்கள் ஆசி யாத்திரையில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “மத்திய அரசின் திட்டங்களால் அதிக பயன் அடைந்த மாநிலமாக தமிழகம் இருக்கின்றது . மத்திய அரசு அறிவித்த இரண்டு நாள் ராணுவ தளவாட உற்பத்தி தொழில் தளவாடங்களில் ஒன்று உத்திரப் பிரதேசத்திற்கும், மற்றொன்று தமிழகத்திற்கும் ஒதுக்கப்பட்டது. மீன்வளத்துறை சார்பில் சென்னையில் சிறப்பு பொருளாதார கடற்பாசி பூங்கா 3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை மேம்பாட்டிற்கு 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 7 கோடி மதிப்பிலான பல திட்டங்கள் மூலம் தமிழ்நாடு பலன் அடைந்துள்ளது. பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டின் கீழ் கொண்டுவர பெரும்பாலான மாநிலங்கள் தயாராக இல்லை. பெட்ரோலுக்கு ரூபாய் 5 குறைக்க உள்ளதாக திமுக கூறி மூன்று ரூபாயை குறைத்தது. ஆனால் டீசல் விலையை குறைக்கவில்லை. மகளிருக்கு ஆயிரம் ரூபாய், பயிர்கடன், கல்விக்கடன் ஆகிய வாக்குறுதிகளுக்கான விவரங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை” என்று அவர் திமுக அரசை குற்றம் சாட்டினார்.