தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதை எடுத்துக் கூறி உடனடியாக நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், கிராமபுறங்களில் உள்ள குடும்பத்திற்கு ஒரு நிதியாண்டில் உத்தரவாதமளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் அதிகபட்சம் 100 நாட்கள் உடல் உழைப்பை வழங்கும் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு திட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் ஒன்றாகும்.
2021-2022 ஆம் ஆண்டில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ.3524.69 கோடியை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொழிலாளர்கள் கணக்கில் வரவு வைத்து முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு நிதி எதுவும் விடுக்கப்படாத காரணத்தினால் நவம்பர் 1 முதல் ரூ.1178.12 கோடி ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் பல்லாயிரக்கணக்கான கிராமபுற குடும்பங்கள் சிரமப்படுகின்றனர். இது கிராமப்புற மக்களை வேலைவாய்ப்புக்காக நகர்புறத்திற்கு செல்ல வழிவகுக்கும். எனவே பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வழங்கிட உடனடியாக நிதியினை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.