பாஜகவில் இருந்து வெளியேறிய ரஜிப் பானர்ஜி மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த பல தலைவர்கள், நிர்வாகிகள் பாஜகவிற்கு சென்றுவிட்டனர். தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் பாஜகவில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் தேர்தலுக்கு முன்பாக உதவிய ரஜிப் பானர்ஜி இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “பாஜகவில் இணைந்து மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன். மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு அனுமதி வழங்கிய மம்தா பானர்ஜிக்கும், அபிஷேக் பானர்ஜிக்கும் எனது நன்றி தெரிவித்தார். மேலும் பாஜக விளம்பரங்களை மட்டும் செய்து வருகின்றது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேளாண்மை வளர்ச்சி குறித்த பல உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும் அதை ஒன்றைக்கூட பாஜக நிறைவேற்றவில்லை. மத அரசியல் செய்வது மட்டுமே பாஜகவின் பிரதான விருப்பமாக உள்ளது. இதுவே நான் பாஜகவில் இருந்து வெளியேற முக்கிய காரணம். மாற்றம் வந்து கொண்டிருக்கின்றது. எனக்கும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதே விருப்பம். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.