வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தொடர்பாக 7 வினாக்களுக்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில் போதுமானதாக இல்லை என்று கூறி, இந்த சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு, அருந்ததியர் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தடை விதிக்காத நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு பல லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உள்ளனர். பலரும் வேலைவாய்ப்பில் சேர்ந்துள்ளனர். அவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கியது, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும், பாதிப்புக்கு ஆளாவார்கள். இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அவர்களின் நலனை காக்க தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
40 ஆண்டுகாலமாக நடத்தப்பட்ட சமூகநீதி போராட்டங்களின் பயனாக இந்த உள்ஒதுக்கீடு சாத்தியமானது. இதில் வன்னிய சமுதாய மக்கள் நடத்திய போராட்டமும், உயிர் இழப்பு போன்றவை ஏராளம். அதை தற்போது நீதிமன்றம் ரத்து செய்திருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது சமூகநீதிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு. கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு இயற்றப்பட்டாலும், அதனை இன்றைய ஆட்சி ஏற்றுக்கொண்டது. அந்தவகையில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு உண்டு. அதை நிறைவேற்றுவார் என நம்புகிறேன். உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.