நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார் .
டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்னில் சுருண்டது. குறிப்பாக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிப்பதில் கவனம் செலுத்தவில்லை. இதன்பிறகு 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இறுதியாக 14.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனிடையே தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி கூறும்போது, “பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் நாங்கள் போதுமான அளவிற்கு தைரியமாக செயல்படவில்லை. அதேபோல் பீல்டிங்கில் களம் இறங்கிய போதும் துணிச்சலுடன் செயல்படவில்லை. அதேசமயம் நியூசிலாந்து அணி வீரர்கள் எங்களைவிட தீவிரத்துடன் செயல்பட்டனர் .அதோடு இந்திய அணிக்காக விளையாடும் போதும் நிறைய நெருக்கடிகள், எதிர்பார்ப்புகள் எப்போதும் இருக்கும் .அதை சமாளித்து தான் விளையாட வேண்டும்” இவ்வாறு கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார் .