தமிழ்நாடு என பெயர் சூடப்பட்ட ஜூலை 18-ஆம் தேதி அன்று தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அதன்படி மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய பகுதிகள் பிரிந்து சென்றது.
எனவே 2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதி அன்று தமிழ்நாடு மாநில நாளாக அரசு முன்னதாகவே அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இன்று பல தரப்பிலிருந்தும் நவம்பர் 1ஆம் தேதி எல்லை போராட்டத்தை நினைவு கூறும் என்பதால் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுவது பொருத்தமாக இருக்காது என்று கூறினர்.
இதையடுத்து முன்னாள் முதலமைச்சரான பேரறிஞர் அண்ணா 1968ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மெட்ராஸ் மாகாணம் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என பெயரிட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். எனவே பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ஆம் நாள் தமிழர்களால் கொண்டாடப்பட அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு நாள் தொடர்பாக அரசு ஆணை அறிவிப்பதற்கு முன் கலந்தாய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் டுவிட்டர் பதிவில்,” தமிழ்நாடு நாள் குறித்து அரசாணை அறிவிப்பதற்கு முன் அனைத்து கட்சி தலைவர்கள், எல்லை மீட்புப் போராளிகள், இன உணர்வாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் ஆகியோரிடம் கலந்தாய்வு செய்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது என்றும் இதனை முதல்வர் ஸ்டாலினுக்கு எனது வேண்டுகோளாக வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.