மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள குருந்தங்குடி கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தா என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் ரமேஷ் வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சாந்தா சிவகங்கை மாவட்டம் கண்ணன்குடியை அடுத்துள்ள ஆரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்த நிலையில் இவரது நடத்தையில் ரமேஷ்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து சாந்தா தேவக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்து காவல்துறையினர் கணவன்-மனைவி இருவரையும் சேர்ந்து வாழும்படி அறிவுறுத்தி சமரசம் செய்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக சாந்தா குருந்தக்குடியில் உள்ள ரமேஷ் வீட்டில் இருவரும் வசித்து வந்துள்ளனர்.
இருப்பினும் ரமேஷ்க்கு தொடர்ந்து சாந்தா மீது சந்தேகம் அதிகரித்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து சாந்தாவை தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ரமேஷ் குருந்தக்குடி கிராம நிர்வாக அலுவலரிடம் நடந்ததை கூறி சரணடைந்துள்ளார்.
இதனைதொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் ரமேசை திருவாடனை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்து கிடந்த சாந்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.