குஜராத் மாநிலத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், கிர் சோம்நாத் மாவட்டம் கோடினார் பகுதியை சேர்ந்த 25 வயதான திருமணமான பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அங்குள்ள ஆயுர்வேத க்ளினிக்கிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஹரி சோலங்கி அவரின் உடலில் தீய ஆவி புகுந்து இருப்பதாகவும், அதை சரி செய்வதற்கு சில சடங்குகளை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண் திருமண சேலையை அணிந்து வரவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதை நம்பிய அந்தப் பெண்ணும் அவரது மாமியாரும் திருமண சேலையை அணிந்து கொண்டு ஆயுர்வேத மருத்துவரிடம் வந்தார்.
அப்போது மருத்துவர் மாமியாரை வெளியில் நிற்கச் சொல்லிவிட்டு பெண்ணை மட்டும் அறைக்குள் அழைத்துச் சென்று சில மருந்துகளை கொடுத்துள்ளார். இதில் அந்த பெண் மயக்கம் அடைந்தார். பின்னர் அவரை வைத்து பூஜைகள் செய்து, பூஜை முடிந்த பிறகு அரை மயக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணை சேலை மாற்றி விட்டு வருமாறு கூறியுள்ளார். அந்த பெண்ணும் அறைக்குச் சென்று சேலை மாற்றி கொண்டிருந்த போது மருத்துவர் சோலங்கி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்த அப்பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை தனது கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஆயுர்வேத மருத்துவரின் மீது புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவரை தேடி வருகின்றனர்.