கொரோனா தொற்று நடவடிக்கைகளை சரியாக கையாளவில்லை என்பதால் பிரேசில் அதிபர் மீது குற்றவியல் வழக்குகள் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு அந்நாட்டு அதிபர் ஜெயின் போல்சொனாரோ தான் காரணம் என்று அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரபல செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “உலக அளவில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் அதிக உயிரிழப்புகளை சந்தித்தது அமெரிக்கா. இவர்களுக்கு அடுத்தப்படியாக பிரேசில் உள்ளது. இதுவரை பிரேசிலில் ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்று பரவலை அதிபர் ஜெயின் போல்சொனாரோ தலைமையிலான அரசு மிகவும் மோசமாக கையாண்டதினால் தான் அதிக உயிர் சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து 11 பேர் அடங்கிய சிறப்பு நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் கடந்த ஆறு மாதங்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பாக ஜெயின் போல்சொனாரோ மீது குற்றவியல் வழக்குகள் தொடரவேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு தலைமை வழக்கறிஞர் ஆகஸ்டோ அராஸிடம் அந்த சிறப்பு குழு அறிக்கை ஒன்றை கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் அந்த அறிக்கைக்கு ஆதரவாக ஏழு பேரும் எதிர்ப்பு தெரிவித்து 4 பேரும் வாக்களித்துள்ளனர். குறிப்பாக அந்த அறிக்கையில் ” கொரோனா தொற்று பரவலை பொருட்படுத்தாமலும் அதுக்குறித்து வேடிக்கையான விமர்சனங்களை தெரிவித்து பொதுமக்களை ஏமாற்றியது, வன்முறைச் செயல்களுக்கு துணையாக இருந்தது, அரசின் நிதியை தவறான வழியில் பயன்படுத்தியது, மனித சமுதாயத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரேசில் அதிபர் மீது வழக்கு தொடர தலைமை வழக்குரைஞர் ஆகஸ்டோ அராஸிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் அதிபர் முற்றிலும் மறுத்துள்ளார். இனிமேல் அறிக்கையின் பரிந்துரையை ஏற்றுகொள்வதா வேண்டாமா என்பதை தலைமை வழக்குரைஞர் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் தலைமை வழக்கறிஞர் ஆகஸ்டோ அதிபர் ஜெயின் போல்சொனாரோவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு சாதகமாகவே முடிவு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சிறப்பு நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகளை நன்றாக ஆராய்ந்த பின்னர் தான் முடிவெடுக்கப்படும் என்று ஆகஸ்டோ அராஸின் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிலும் நாடாளுமன்ற குழுவின் இந்த முடிவானது பிரேசில் அதிபருக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வருகின்ற 2022 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் இக்குழுவின் முடிவால் அதிபருக்கு வெற்றி வாய்ப்பு கிடைப்பது அரிதான ஒன்றாகிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்படும் பொதுமுடக்கங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று கூறுபவர்களில் இவரும் ஒருவர். மேலும் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக போதிய நடவடிக்கை மேற்கொள்ளாததும் தடுப்பூசி சட்டத்தை சரியாக அமல்படுத்தாதும் நோயின் தீவிர தன்மைக்கு காரணம் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில்தான் அரசின் செயல்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு சிறப்பு நாடாளுமன்றத்துக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் ஆணையிட்டது. இதனை ஏற்று தான் நாடாளுமன்ற மேலவையான செனட் சபை குழுமம் விசாரணையை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக பிரேசிலில் கடந்த புதன்கிழமை வெளிவந்த தகவலின் படி 2,17,48,984 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 6,06,293 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து 2,09,44,087 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 1,98,604 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 8,318 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.