தமிழகத்தில் நேரு பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நவம்பர் 12ம் தேதி பேச்சுப்போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேரு பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நவ.12 ஆம் தேதி காலை 10 மணியளவிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் மதியம் 2 மணியளவிலும் சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என கூறப்படுகிறது. போட்டிகளில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் நேரடியாக போட்டி நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும் என்றும் கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது போட்டியில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவர்களில் இருவரை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத் தொகையாக ரு. 2,000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்களுக்கு 0427- 2417741 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கூறப்படுகிறது.