தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கு 31 லட்சத்தி 214 மாணவர்களுக்கு செலவிட பள்ளிக்கல்வித் துறை மானியம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சகத்துடன் திட்ட ஒப்புதல் கொள்ளும் நடப்பு கல்வி ஆண்டில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பள்ளி கல்விக்கு 31 லட்சத்து 214 மாணவர்களுக்கு செலவிட ரூ.77 கோடியே 90 லட்சம் மானியம் வழங்கியுள்ளது. இதில் 50 சதவீதம் முதல் தவணையாக பள்ளி மானிய தொகை அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானிய தொகையின் 10% தொகையை முழு சுகாதார செயல் திட்டத்திற்கு செலவிட வேண்டும். மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் நடத்தை மாற்ற செயல்பாட்டு திறன் மேம்பாட்டுக்கு செலவிட வேண்டும். பள்ளிகளில் மின் கட்டணம், இணையம், ஆய்வகம், குடிநீர், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் போன்றவற்றுக்கு இந்த நிதியை செலவிட வேண்டும்.
அரசு பள்ளிகளில் மோசமாக உள்ள சுற்று சுவர், வகுப்பறை மற்றும் கழிப்பறை பராமரிக்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் தொடர் செலவிற்காக நிதி ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.