42 பரப்புரையாளர்கள் மீண்டும் வேலை வழங்குமாறு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த பரப்புரையாளர்கள் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியதாவது, இம்மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் 42 நபர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பரப்புரையாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டோம்.
ஆனால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கடந்த மாதம் ஒன்றாம் தேதி வேலையில் சேர்ந்து கொள்ள பணி ஆணை வழங்கப்பட்டு இருந்தது. அதனைக் கொண்டு சென்று பேரூராட்சி செயல் அலுவலரிடம் காண்பித்த போது அவர்கள் எங்களை வேலை செய்ய அனுமதி அளிக்கவில்லை. இது பற்றி எங்களை பணியில் அமர்த்திய தனியார் நிறுவனத்தை அணுகி முறையிட்டோம். இதனையடுத்து அவர்கள் கடலூர் மண்டல பேரூராட்சி அலுவலகம் மூலமாக பணியாணை வரும் எனக் கூறி அவர்கள் வழங்கிய பணி ஆணையை வாங்கிக் கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து எங்களுக்கு திரும்பவும் வேலை இதுவரை வழங்காமல் இருந்து வருகின்றனர். இதன் காரணத்தினால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். எனவே பணி நீக்கம் செய்யப்பட்ட எங்களுக்கு திரும்பவும் வேலை வாங்கி எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.