இந்தியர் ஒருவர் சமூக வலைதளத்தில் கிடைத்த பிரித்தானிய பெண்ணின் நட்பால் 57 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
இந்தியாவின் புவனேஷ்வர் பகுதியை சேர்ந்த 65 வயது நபருக்கு சூசன் என்ற பிரித்தானிய பெண்ணின் நட்பு கிடைத்தது. மேலும் அவர், தான் லண்டனில் வசிப்பதாக கூறி சூசனுடன் வாட்ஸ்ஆப் செயலியில் உரையாடி வந்துள்ளார். அதோடு சூசன் தன்னை செல்வந்தராக காட்டி, இந்தியரை தனது HSBC வங்கி கணக்கில் நாமினியாக அறிவித்துள்ளார். இந்த சமூக ஊடக நட்பு நாளுக்குநாள் அதிகரித்த நிலையில், இந்தியருக்கு ஒரு நாள் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.
அந்த அழைப்பில், மைக்கேல் லாரண்ட் என்ற நபர் HSBC வங்கியிலிருந்து அழைப்பதாகவும், சூசன் இறந்ததாகவும் கூறினார். மேலும், சூசன் வங்கிக்கணக்கில் உள்ள 2 கோடி ரூபாய் பணம் அவரது நாமினியான உங்களுக்கு தான் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். பின்னர் ஜான் ஃப்லிண்ட் என்ற மற்றொரு நபர், இந்தியரை தொடர்பு கொண்டு தான் HSBC வங்கியின் அதிகாரி என்று கூறினார். அதில் அவர், சூசனின் பணத்தை பெற 50 லட்சம் ரூபாய் ப்ராசசிங் கட்டணம் செலுத்தி, அடையாள அட்டை உள்ளிட்ட சில விபரங்களும் அனுப்புமாறு கேட்டுள்ளார்.
இதனால், இந்தியர் அவரின் விபரங்கள் மற்றும் 40.51 லட்சம் ரூபாய் பணமும் அனுப்பினார். இதன்பின், சூசன் மற்றும் HSBC வங்கி அதிகாரிகள் காணததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இந்தியர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிரித்தானிய சிம் கார்டுகளில் பேசியவர்களை தேடும் பணியில் இறங்கினர். இந்த மோசடியால், இந்தியர் தனது ஓய்வூதிய பணத்தை இழந்துள்ளார்.
இதேபோல், கடந்த மாதமும் ஒரு இந்தியர் 57.4 லட்சம் ரூபாயை பறிகொடுத்தார். மேலும் சமூக ஊடகங்களில் தொடரும் மோசடியில், பண ஆசை மற்றும் சபலத்தால் பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இந்த செய்திகளை எச்சரிக்கையாக எடுத்து கொண்டு பண மோசடியில் இருந்து தப்புமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.