நெல்லையில் காப்பகங்களுக்கு போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் தலைமையில் கடந்த 16-ஆம் தேதி அனைத்து காப்பக நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது காப்பகங்களில் தங்கியிருப்பவர்களுக்கு தேவையான உடை, பாதுகாப்பு, தண்ணீர் வசதி, விளையாட்டு உபகரணங்கள், கணினி வசதி, போர்வைகள், படுக்கை வசதி போன்றவை குறித்து கேட்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் நன்கொடையாளர்கள் மூலம் காப்பக நிர்வாகிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஏற்பாடு செய்தார். இந்நிலையில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து அவற்றை காப்பகங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தற்போது நெல்லை மாநகரில் செயல்பட்டு வரும் சிறுவர்கள், பெண் குழந்தைகள், ஆதரவற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் என மொத்தம் 17 காப்பகங்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் ஆகியவற்றை போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு குழந்தைகளுக்கு இனிப்பு, பட்டாசு, காப்பக பணியாளர்களுக்குப் புத்தாடை ஆகியவற்றை போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் டி.பி. சுரேஷ்குமார், கூடுதல் துணை கமிஷனர் சங்கர், மதுரை அரசு சட்டக்கல்லூரி பேராசிரியர் சிவகுமார், குழந்தைகள் நல தலைவர் சந்திரகுமார், நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.