இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள குழுமூர் கிராமத்தில் தினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பலூர் தனியார் கல்லூரியில் 3- ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் மற்றும் அவரது நண்பரான ஆறுமுகம் என்பவருடன் அங்கனூரிலுள்ள தனது பாட்டி வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து குழுமூர் அரசு காப்புக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள விவசாய நிலத்திலிருந்து சாலையை கடக்க முயன்ற டிராக்டர் ஒன்று தினேஷின் இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது.
இதில் காயமடைந்த ஆறுமுகம் மற்றும் தினேஷ் ஆகியோரை அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ஆறுமுகம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிராக்டர் ஓட்டுநரான ரவியின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.