அரசு பேருந்து கார் நேருக்கு நேர் மோதியதில் பெண் உள்பட 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள தண்ணீர்தொட்டி தெருவில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். கார் டிரைவரான இவர் இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை சவாரிக்கு ஏற்றிக்கொண்டு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல செல்வம் 9 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இடுக்கிக்கு சென்றுவிட்டு மீண்டும் வேலை முடிந்ததும் கூடலூரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது குமுளி மலைப்பகுதியில் அருகே உள்ள கொண்டை ஊசி வளைவு பகுதி அருகே சென்ற போது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாரதவிதமாக செல்வம் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் கார் டிரைவர் செல்வம் மற்றும் உள்ள இருந்த ,முருகேஸ்வரி, கலாவதி ஆகிய 3 பேருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. மற்ற தொழிலாளர்கள் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர்.
மேலும் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மட்டும் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லோயர்கேம்ப் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி அரசு பேருந்து டிரைவர் ஆண்டிபட்டியை சேர்ந்த கணேஷன் என்பவரை கைது செய்துள்ளனர்.