இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வங்க தேசத்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது.
இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய வங்கதேச அணி இருபது ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது.அந்த அணியில் அதிகப்பட்சமாக முகமது நைம் 36 ரன்களை எடுத்தார். இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சஹால் இரண்டு விக்கெட்டுகளையும், கலீல் அஹ்மது, வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர்.
இதன் மூலம் இந்திய அணி முதல் ஆறு ஓவர்கள் முடிவில் 63 ரன்களை சேர்த்தது. அதனைத் தொடர்ந்து அதிரடியில் வங்கதேச அணியின் பந்துவீச்சை பொளந்து கட்டி வந்த ரோஹித் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளை பறக்க விட்டார்.
இதன் மூலம் ரோஹித் சர்மா சர்வதேச டி20 அரங்கில் தனது 18ஆவது அரை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அதன் பின் தவான் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில் இஸ்லாம் பந்து வீச்சில் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 43 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஸ்லாமிடம் தனது விக்கெட்டை இழந்தார்.
பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் இந்திய அணி 15.4 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்து 155 ரன்களை அசால்ட்டாக எட்டிப்பிடித்தது.
இதன் மூலம் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வங்க தேசத்தை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என சமன் செய்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
🚨 India win by eight wickets 🚨
Rohit Sharma smashed 85 helping India level the series with one game left to play! pic.twitter.com/FWG4EugVqe
— ICC (@ICC) November 7, 2019