தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நவம்பர் 1 முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் விடுதிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து விடுதிகள் திறக்கப்படுவதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து விடுதிகளில் நுழைவு பகுதிகளில் இரண்டு கிருமிநாசினி பாட்டில்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வரும்போதே கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவிய பிறகே விடுதிக்குள் நுழைய வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தன் சுத்தம் மற்றும் பெருந்தொற்று தடுப்பு பாதுகாப்பு அணுகு முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விடுதிகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாக்கவேண்டும். மின்சாதனங்களை நன்றாக பராமரித்து மழைக்காலங்களில் நீர் கசிவினால் மின் கசிவு ஏதும் ஏற்படாத வாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
சுகாதார சூழலுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும். விடுதி மாணவர்கள் அவசியமில்லாமல் விடுதியிலிருந்து தங்கள் இல்லங்களுக்கு சென்று வருவதை தவிர்க்க வேண்டும். விடுதிப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.