உரத்திலிருந்து மண் தனியே பிரிவதால் விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கிறது. இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் குச்சிக்கிழங்கு, உருளை கிழங்கு, சோளம், கடலை, மக்காச்சோளம் போன்ற பயிர்களை நிலப்பகுதியில் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடம்பூரை சுற்றியுள்ள காடகநல்லி, கரளியம், இருட்டிபாளையம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய பயிர்களுக்கு அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து உரம் வாங்கி போட்டுள்ளனர். ஆனால் 3 மாதங்களாகியும் சரியான விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் தாங்கள் வாங்கிய உரத்தை தண்ணீரில் கரைத்து பார்த்துள்ளனர்.
அப்போது உரத்தில் இருந்து மண் தனியாக பிரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த புகார் மனுவில் விவசாயிகள் கூறியிருப்பதாவது “கடையிலிருந்து வாங்கிய உரத்தை தண்ணீரில் கரைத்தால் கல், மண் மட்டும் தனியாக பிரிந்து வருகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட கடைக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.