ஜல்லிக்கட்டு காளை முட்டி முதியவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடக்கு ஆண்டியப்பட்டியில் விவசாயியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ரவி தனது தந்தையான பெருமாளுடன் ஜல்லிக்கட்டு காளைக்கு தண்ணீர் காட்டுவதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மிரண்ட காளை பெருமாளை முட்டியது.
இதனால் பெருமாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் ரவி பெருமாளை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து விராலிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.