விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. மேலும் அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு ஆகிய படங்கள் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மாநாடு திரைப்படம் தீபாவளி ரேஸிலிருந்து விலகியது. இறுதியில் எனிமி, அண்ணாத்த படங்கள் மோதுவது உறுதியானது. தற்போது எனிமி படத்திற்கு தேவையான தியேட்டர்களை ஒதுக்க மறுப்பதாக புகார் கிளம்பியுள்ளது.
இந்நிலையில் எனிமி படத்தயாரிப்பாளர் வினோத் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘தீபாவளிக்கு எனிமி படத்துடன் வெளியாகும் இன்னொரு பெரிய படத்தை திரையரங்குகளில் திரையிட வேண்டும் என வற்புறுத்துவதாக தகவல் வருகிறது. இது சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயமில்லை. எனிமி படத்தை ஓடிடி தளம் வாங்க முன்வந்தும் நான் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்தேன். இந்த பிரச்சினையில் எனக்கு தயாரிப்பாளர் சங்கம் உதவி செய்ய வேண்டும். எனிமி படத்திற்கு 250 திரையரங்குகள் போதும். திரையரங்குகள் ஒதுக்காவிட்டால் எதிர்த்து போராடுவேன்’ என தெரிவித்துள்ளார்.