தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என்றும், எந்தெந்த இடங்களில் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பையும், வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் செயல்படும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான உதவி பேராசிரியர்களுக்கான நியமன ஆணையை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இதற்கு முன்னர் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல கல்லூரியில் உதவிப் பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தூய்மைப் பணியாளர், காவலர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சார்பில் கடந்த 13-ஆம் தேதி நாளிதழில் வெளியானது. இந்தப் பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதனால் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.
இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னையை சேர்ந்த சுஹைல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் நியமன நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத் துறை நிதி மூலம் நடத்தப்படக்கூடிய ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்ற விதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும், உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.