ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு ஒன்றின் எரிமலையில் நேற்று பெரும் சீற்றம் உண்டாக்கியுள்ளது.
ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள பெரிய தீவுகளில் ஒன்றான கியூஷூ தீவில் அசோ என்ற எரிமலை உள்ளது. மேலும் இந்த அசோ எரிமலையானது ஜப்பான் நாட்டின் பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில் நேற்று எரிமலையில் திடீரென பெரும் சீற்றம் உண்டாகியுள்ளது. அதோடு எரிமலை வெடித்து சிதறியதில் வானத்தை முட்டும் வகையில் கரும்புகை வெளியாகியுள்ளது.
குறிப்பாக எரிமலையில் இருந்து குழம்பு வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் எரிமலை தொடர்ந்து சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும் எரிமலையில் இருந்து வெளியான கரும்புகை சுமார் 3.5 கி.மீ உயரத்திற்கு படர்ந்துள்ளது. மேலும் அசோ எரிமலை அமைந்துள்ள அசோ நகரில் சுமார் 26,000 மக்கள் வசித்து வருகின்றனர்.
தற்போது எரிமலையில் ஏற்பட்டுள்ள சீற்றத்தின் காரணமாக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து எரிமலையில் இருந்து எரிமலைக்குழம்பு வெளியேறும் பட்சத்தில், அந்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.