பொள்ளாச்சி அருகே வாகன சோதனையில் மோட்டார் சைக்கிள் மீது காவல் ஆய்வாளர் லத்தியை வீசிய சம்பவம் குறித்து 2 வாரங்களில் அறிக்கை அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே சங்கம்பாளையம் சந்திப்பில் வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த சுந்தரா புரத்தைச் சேர்ந்த 3 பேர் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மீது கோட்டூர் காவல் உதவி ஆய்வாளர் லத்தியை வீசியுள்ளார்.
இதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனம் சரக்கு வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்ததில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து செய்திகளில் வெளியான தகவல்களின் அடிப்படையில் தாமாக முன்வந்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் சம்பவம் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.