பிரேசிலில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரேசில் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மேட்டோ கிராஸ்சோ என்னும் மாகாணத்தில் பராகுவே ஆறு ஓடுகிறது. இந்த ஆறு தென் அமெரிக்காவில் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றாக காணப்படுகிறது. மேலும் மேட்டோ கிராஸ்சோ பகுதிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பராகுவே ஆற்றில் படகு சவாரி செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை 21 சுற்றுலா பயணிகள் இந்த பராகுவே ஆற்றில் படகு சவாரிக்கு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து ஆற்றின் நடுப்பகுதியில் படகு சென்று கொண்டிருந்தபோது அங்கு பலத்த காற்று வீச தொடங்கியது. குறிப்பாக மணிக்கு சுமார் 145 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதாக கூறப்படுகிறது.
இதனால் படகு நிலைதடுமாறி ஆற்றில் மூழ்கி விபத்தில் சிக்கியது. மேலும் படகில் இருந்த அனைவரும் ஆற்றுநீரில் மூழ்கி தத்தளித்தனர். இந்த சம்பவத்தில் படகில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருப்பினும் நீரில் தத்தளித்த 14 பேர் தாமாகவே நீந்தி கரை சேர்ந்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிய ஒருவர் மாயமான நிலையில் அவரது கதி என்ன என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.