உத்திரப்பிரதேச மாநிலத்தில் கார் சோதனையின்போது ஆவணங்களை கேட்ட காவல்துறையினரை கடத்திச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கோதி பச்சேடா என்ற கிராமத்தில் வசித்து வரும் சச்சின் ராவல் என்பவர், இரண்டு வருடத்திற்கு முன்பு ஹரியானா மாநிலத்தில் ஒரு கார் விற்பனை மையத்திற்கு சென்று மாருதி ஸ்விப்ட் காரை வாங்க வந்துள்ளதாகவும், அதனை ஒட்டி பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதையும் நம்பி விற்பனை மையத்தில் இருந்த ஊழியர்கள் காரை ஓட்டி பார்ப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். காரை எடுத்துச் சென்ற சச்சின் பின்னர் திரும்பி வரவே இல்லை. பின்னர் அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சச்சின் தனது பக்கத்து வீட்டில் வசிப்பவரின் கார் எண்ணைக் கொண்டு நம்பர் பிளேட் தயார் செய்து காரை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சுராஜ்பூரில் வாகன சோதனையின்போது போலீசார் ஆவணங்களை கேட்டுள்ளனர். அப்போது சச்சின் செல்போனில் உள்ள தகவல்களை காட்டியுள்ளார். ஆனால் ஆர்.சி. புக் உள்ளிட்ட ஆவணங்களை கேட்க, சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை வேகமாக இழுத்து காருக்குள் போட்டு கொண்டு 15 கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு அவரை கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளார். இதனால் சச்சின் மீது கடத்தல், பணியிலிருந்த நபரை தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். காரை திருடியது மட்டுமல்லாமல் இரண்டு வருடங்களாக டிமிக்கி கொடுத்து வந்த நபரை போலீசார் சோதனையின்போது கையும் களவுமாக பிடித்துள்ளனர்.