குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் முன்பாக பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று இருக்கிறது. இதில் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் அருகாமையில் பெண் ஒருவர் 4 குழந்தைகளுடன் மண்எண்ணெய் கேனை கையில் எடுத்துள்ளார். அதை பார்த்த காவல்துறையினர் அச்சம்பவத்தை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் இடிதாங்கி கிராமத்தில் வசிக்கும் ராஜன் என்பவரின் மனைவி சுமதி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அவர் கூறியதாவது, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இரண்டு தரப்புக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதில் என்னை தாக்கியவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் ஒருவருக்கு ஓட்டு போடவில்லை என கூறி என்னுடைய கணவர் ராஜனை கும்பலாக வந்து தாக்கியதில் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர்கள் எங்களை மிரட்டி மீன்களை விற்பனை செய்ய விடாமல் இடையூறு செய்கிறார்கள் என தெரிவித்துள்ளார். பிறகு காவல்துறை அதிகாரிகள் கூறி கலெக்டரை நேரில் சந்திக்க வைத்து பின் புகார் மனுவை வாங்க செய்துள்ளார். மேலும் மனுவை வாங்கிக் கொண்ட கலெக்டர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.