மனைவிக்கு வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் கணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள உடையூர் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணி பெண்ணான பிரியாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழரசன் நிகழ்ச்சி நடைபெறுவதற்குள் வேலைக்கு சென்றுவிட்டு வந்து விடலாம் என நினைத்து சென்றுள்ளார். அப்போது அவர் வளர்க்கும் நாயும் கூடவே சென்றுள்ளது.
இதனை அடுத்து வயலில் ஓரமாக மின்கம்பி அறுந்து கிடந்ததை கவனிக்காமல் அதை மிதித்ததால் மின்சாரம் தாக்கி தமிழரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அவருடன் சென்ற நாயும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த அவரின் மனைவி பிரியா மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து தமிழரசனின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளனர்.
இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தமிழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.