இம்பாலில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் குலுக்கல் முறையில் டிவி, செல்போன் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே தற்போது நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம். இதனால் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை மேம்படுத்த இம்பால் மேற்கு மாவட்ட நிர்வாகம் ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி வரும் 24ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஏழாம் தேதி வரை நடைபெறும் மூன்று மெகா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் பல பரிசுகள் வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது. இதில் கலர் டிவி, செல்போன், போர்வைகள் போன்றவை பரிசாக வழங்க உள்ளதாக கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆறுதல் பரிசும் உண்டு என்று தெரிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தை பொறுத்தவரை இம்பால் மேற்கு மாவட்டத்தில்தான் அதிக மக்கள் வசிக்கின்றார்கள். அதனால் அப்பகுதி மக்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை தூண்டுவதற்காக இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.